பணம் பதுக்கியதாக புகார்: காவல் ஆய்வாளர் ஆயுதப் படைக்கு மாற்றம்
By DIN | Published On : 06th February 2019 04:10 AM | Last Updated : 06th February 2019 04:10 AM | அ+அ அ- |

சென்னையில் பணத்தை பதுக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை கிண்டி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் எஸ்.எஸ்.குமார். இந்நிலையில் கிண்டி பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் போலீஸார் அண்மையில் சோதனை செய்தனர். இதில் அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீஸார் பிடித்தனர். மேலும், அந்த கும்பல் வைத்திருந்த பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் சூதாட்ட கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல் ஆய்வாளர் குமார் பதுக்கி வைத்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் புகார் கூறப்பட்ட குமாரை, சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை
உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...