புற்றுநோயில் இருந்து மீண்டெழுந்து நலமுடன் வாழ்ந்து வருபவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் கெளரவித்தனர்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும், புரிதல்களையும் மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு மருத்துவர்கள் அப்போது அறிவுறுத்தினர்.
சர்வதேச புற்றுநோய் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, புற்றுநோய் மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கலைச்செல்வி, அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன், கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர் கலையரசி, பொது மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் டிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளும் இதில் பங்கேற்றனர். புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்த சிலர் நிகழ்ச்சியில் பேசும்போது, புற்றுநோய் குறித்த தவறான புரிதல்களைப் போக்க தாங்கள் முயற்சிப்போம் என்று தெரிவித்தனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும், மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அந்நோய்க்கான மருத்துவ சிகிச்சைகள், வருமுன் காக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.
கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளில் 2,347 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவர்களில் 15 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அப்போது மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.