பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் சாவு: பேருந்தை நிறுத்தியதால் உயிர் தப்பிய பயணிகள்
By DIN | Published On : 12th February 2019 03:01 AM | Last Updated : 12th February 2019 04:08 AM | அ+அ அ- |

சென்னை கோயம்பேடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இறக்கும் தருவாயிலும், சாலையோரமாக பேருந்தை அவர் நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (55). இவர் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக திருப்பத்தூர் பணிமனையில் பேருந்து ஓட்டுநராகப் பணி செய்து வந்தார். ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு பேருந்தை ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர். அந்தப் பேருந்து கோயம்பேடு நெற்குன்றம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை வந்தபோது ரமேஷுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும், வலியையும் பொருள்படுத்தாமல் ரமேஷ் சாலை ஓரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு, தனது இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.