கச்சா எண்ணெய் குழாய் பாதை அர்ப்பணிப்பு: சிபிசிஎல் ஆலையில் விழா
By DIN | Published On : 12th February 2019 04:09 AM | Last Updated : 12th February 2019 04:09 AM | அ+அ அ- |

சிபிசிஎல் நிறுவனத்தில் புதிய கச்சா எண்ணெய் குழாய் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை மணலியில் உள்ள ஆலையில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் பெட்ரோலியப் பொருள் தேவைக்காக உலகத் தரத்தின் நியதியைப் பின்பற்றி அதற்கு இணையாக மிக பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை மிக்க புதிய கச்சா எண்ணெய் குழாய் பாதையை சென்னை துறைமுகம் முதல் மணலியில் உள்ள சிபிசிஎல் மணலி ஆலை வளாகம் வரை பதிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய கசிவையும் துல்லியமாகக் கண்டறியும் வகையில் இந்தப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் சிபிசிஎல் நிறுவனத்தின் புதிய கச்சா எண்ணெய் குழாய் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிபிசிஎல் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.பாண்டே, தொழில்நுட்ப இயக்குநர் ஆர்.ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் சென்னை மணலி சிபிசிஎல் வளாகத்திலும் இது தொடர்பான ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் திருவொற்றியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி கலந்து கொண்டு பேசினார். இதில் சிபிசிஎல் நிதிப் பிரிவு இயக்குநர் ராஜீவ் அயிலவாடி, தலைமைப் பொதுமேலாளர் ஜி.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.