சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்கம் : சென்னைக்கு ஓரிரு நாளில் விநியோகம்

கோடையைச் சமாளிக்க சென்னைக்கு அருகில் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தக் குடிநீர் ஓரிரு நாள்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. 
சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் குடிநீர்.
சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் குடிநீர்.


கோடையைச் சமாளிக்க சென்னைக்கு அருகில் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தக் குடிநீர் ஓரிரு நாள்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. 

சென்னை மக்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தினமும் 83 கோடி லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் விநியோகித்து வந்தது.  இதற்காக புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகள்,  நெம்மேலி-மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள்,  வீராணம் போன்ற  குடிநீர் ஆகிய ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டன.  இதையடுத்து கடந்த ஆண்டு  பருவமழை குறைவு,  நிலத்தடி நீர் சரிவு போன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீரை விநியோகிக்க முடியவில்லை. இதனால்  குடிநீரின்அளவு 65 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால்  தற்போது கடந்த சில மாதங்களாக 55 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு  வருகிறது.  நிகழாண்டு கோடை காலம் நெருங்கி வருவதால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  முதல் கட்டமாக சிக்கராயபுரம் கல்குவாரிகளில் உள்ள நீரை எடுத்து வரும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தப் பணி தற்போது நிறைவுபெற்றுள்ளதால் ஓரிரு நாள்களில் பொதுமக்களுக்கு கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்பட்ட குடிநீர் செம்பரம்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:  சென்னை ஏரிகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏறத்தாழ 5 டிஎம்சி அளவுக்கு (4,995 மில்லியன் கன அடி) தண்ணீர் இருந்தது.  ஆனால் தற்போது வெறும் 948 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் தேவையான குடிநீரை முழுமையாக விநியோகிப்பதில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகிறோம்.  முதல் கட்டமாக சென்னைக்கு அருகில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை சுத்திகரித்து பயன்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது அதை செயல்முறைப்படுத்தியுள்ளோம்.

கூடுதலாக 5.6 கோடி லிட்டர் குடிநீர்:  சிக்கராயபுரம் கல் குவாரியில் நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்படும்.  இதையடுத்து முறையான பரிசோதனைகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.  இன்னும் இரண்டு மாதங்களுக்கு கல்குவாரிகளிலிருந்து குடிநீர் எடுக்கப்படும். 

அடுத்த கட்டமாக ரூ.47 கோடியில் 350 தனியார் விவசாயக் கிணறுகள் வாடகைக்கு அமர்த்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் 171 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல்,  ரெட்டை ஏரி, பெரும்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ. 48.45 கோடி மதிப்பீட்டில் நீர் எடுத்தல் போன்ற பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை மாநகருக்கு கூடுதலாக 5.6 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com