கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன மார்பகப் புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு
By DIN | Published On : 04th January 2019 04:38 AM | Last Updated : 04th January 2019 04:38 AM | அ+அ அ- |

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, சிகிச்சை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.50 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் டாக்டர் வி.சரோஜா, நிலோபர் கபில், வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா ஆகியோர் கலந்துகொண்டு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன் முதலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் அதிநவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய மார்பகப் பரிசோதனை, சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3டி டிஜிட்டல் மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட், பிரத்யேக மார்பகச் சுருள்களுடன் கூடிய எம்.ஆர்.ஐ ஸ்கேன், கட்டியில் இருந்து திசுக்களை எடுத்தல் , நுண் படிமங்களை அகற்றுதல் போன்ற சிகிச்சைகள், பரிசோதனைகள் செய்யப்படும். இந்த சிகிச்சைகள் அனைத்தும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக வழங்கப்படும்.
குறிப்பாக, ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படுவதுடன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அறுவைச் சிகிச்சை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். விழுப்புரம், சிவகங்கை, கரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி விரைவில் வழங்கப்படும் என்றார்.
முன்னதாக, மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலூன்களை பறக்க விட்டும், அதுதொடர்பாக உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது.