ஜன.8,9-இல் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 04th January 2019 04:35 AM | Last Updated : 04th January 2019 04:35 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தவேண்டும்; கமலேஷ் சந்திரா குழுவின் அனைத்து சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; புதிய தொழில்நுட்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்; தினக்கூலி ((காஷூவல்) ஊழியர்களுக்கு கடந்த 2006 ஜனவரி 1 முதல் புதிய ஊழியம் வழங்கவேணடும் உள்பட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர்கள் நாடுமுழுவதும் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது குறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்(3-ஆம் பிரிவு) மாநிலத் தலைவர் இராமமூர்த்தி கூறியது: நாடுமுழுவதும் அஞ்சல் துறையில் 45 சதவீதம் காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 2.65 லட்சம் பேரும், அஞ்சல் துறையில் 2.25 லட்சம் பேரும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 30,000 ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார் அவர்.