நபார்டு வங்கியின் கிராமிய திருவிழா சென்னையில் தொடக்கம்
By DIN | Published On : 04th January 2019 04:37 AM | Last Updated : 04th January 2019 04:37 AM | அ+அ அ- |

சென்னை நுங்கம்பாக்கத்தில் வியாழக்கிழமை கிராமிய திருவிழா கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் அருந்ததி மெக்.
நபார்டு வங்கி சார்பில், கிராமிய திருவிழா எனும் கண்காட்சி மற்றும் விற்பனை தியாகராயநகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பட்டு, பருத்தி சேலைகள், எம்பிராய்டரி ஆடைகள், இயற்கை உணவுப் பொருள்கள், சிறுதானியப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியை இந்திய ரிசர்வ் வங்கி சென்னை அலுவலகத்தின் மண்டல இயக்குநர்அருந்ததி மெக் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கிராமியப் பொருள்களின் விற்பனையை மேம்படுத்துவதில் நபார்டு எடுத்து வரும் முயற்சி சிறப்புமிக்கது என்றார்.
நிகழ்ச்சியில் நபார்டு வங்கி தமிழ்நாடு மண்டல தலைமைப் பொதுமேலாளர் பத்மா ரகுநாதன் பேசியது:
கிராமப்புற கைவினைப் பொருள்கள், கைத்தறிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் பொருள்களைப் பிரபலப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் நபார்டு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. விற்பனைக் கண்காட்சியை இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நபார்டு வங்கி நடத்தும் என்றார். தமிழ்நாடு அரசின் நிதி ஆலோசகர் நாகூர்அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கிராமிய கைவினைக் கலைஞர்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்று உள்ளனர். இவர்களின் பொருள்களும், பல்வேறு நிறுவனங்களின் பொருள்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.