பிளாஸ்டிக் ஒழிப்பு: அம்பத்தூரில் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th January 2019 04:37 AM | Last Updated : 04th January 2019 04:37 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி, மாற்றுப் பொருள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன்படி, பிளாஸ்டிக் இல்லா சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி அம்பத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதாரக்கேடுகள் குறித்து விழிப்புணர்வும், அதற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருள்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
இதையடுத்து, அம்பத்தூர் தொலைபேசியகம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அம்பத்தூர் தொழில்பேட்டை வரை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், மண்டல அலுவலர் சு. பாலசுப்பிரமணியன், தொழில்பயிற்சி நிலைய முதல்வர் ரேணுகா, மாணவ, மாணவியர் என மொத்தம் 800 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு, மாற்றுப் பொருள் குறித்த விழிப்புணர்வுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.