சென்னையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ஒரே நாளில் 3.75 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பை, கப்புகள் உள்ளிட்ட 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 1) தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதையொட்டி, சென்னை மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது, தடை அமலுக்கு வந்துள்ளதால் சென்னை மாவட்டத்தின் தியாகராயநகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள உணவகம், துணிக்கடை, பேக்கரி, பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக் கடை, வணிக வளாகங்கள் ஆகியவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் 14 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுவினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
3.75 டன் பறிமுதல்: மொத்தம் 48 கடைகளில் நடைபெற்ற சோதனையில் தியாகராயநகரில் உள்ள கடைகளில் இருந்து 3.50 டன்னும், நுங்கம்பாக்கத்தில் உள்ள கடைகளில் இருந்து 250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், குறிப்பாக தி.நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் மட்டும் 2.50 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 டன் சேகரிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட வீடு, கடைகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் வகையில் 15 மண்டலங்களில் உள்ள வார்டு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மாநகராட்சி சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் (டிச. 31) சேகரிப்புத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வியாழக்கிழமை வரை 22 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.