முதன் முதலாக...
By DIN | Published On : 07th January 2019 02:07 AM | Last Updated : 07th January 2019 02:07 AM | அ+அ அ- |

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் ஆன்மிகப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுவரை நிறைய நூல்களை அந்த இயக்கம் பதிப்பித்திருக்கிறது. என்றாலும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அவற்றைத் தந்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு முதல் முறையாகப் புத்தகக் கண்காட்சியில் அரங்கு ஒன்றை எடுத்து, அவர்கள் வெளியிட்ட ஆன்மிக நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தியின் பக்தர்கள், அரங்கைக் கண்டதுமே மகிழ்ச்சியுடன் நுழைந்து ஆன்மிகப் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். முதன்முதலாகப் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கப் புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து, அந்த இயக்கத்தின் தொண்டர் கே.ராகுல் நம்மிடம் கூறியதிலிருந்து...
""மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் பலர் அரங்கைப் பார்த்ததுமே உள்ளே நுழைந்து மகிழ்ச்சியுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் அதைவிட பக்தர் அல்லாத பிறரும் இங்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
நான் பெரியபாளையம் அருகே பனப்பாக்கத்தில் உள்ள சாம்ஸ் மரைன் கல்லூரியில் பொறியியல் படிக்கிறேன். எனக்கு ஆன்மிகத்தில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தொண்டராக இருக்கிறேன். ஏற்கெனவே இந்த ஆன்மிகப் புத்தகங்களை பக்தர்களுக்குத் தந்த அனுபவம் எனக்கு உள்ளது. என்றாலும் பக்தர்கள் அல்லாத பிறரிடம் இந்தப் புத்தகங்களைப் பற்றி எடுத்துச் சொல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறது.
இன்றைய நவீன மருத்துவ முறைகளினால் நோய்கள் தீர்வதை விட பக்கவிளைவுகளே அதிகமாக உள்ளன. "ஆதிபராசக்தி அருளிய அற்புத மருந்துகள்' என்ற புத்தகத்தில் பலவித நோய்களுக்கான இயற்கையான மருந்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இது தவிர, "அன்னையின் முத்தான அருள்வாக்குகள்', "மந்திரநூல்' ஆகிய புத்தகங்களை ஏராளமானோர் வாங்கிச் செல்கிறார்கள். அந்தப் புத்தகங்களைப் பற்றி விளக்கிச் சொல்லி வருகிறேன். இந்தப் பணியைச் செய்வதை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்'' என்றார்.