பள்ளி அருகே நடைமேம்பாலம் கோரிய வழக்கு: மாநில நெடுஞ்சாலை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 03rd July 2019 04:25 AM | Last Updated : 03rd July 2019 04:25 AM | அ+அ அ- |

திருமங்கலம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சாலையைக் கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைத்து தரக் கோரிய வழக்கில் மாநில நெடுஞ்சாலைத் துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ரங்கநாயகி தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எனது மகள் படித்து வருகிறாள். சுமார் 2,500 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளி திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்தப் பள்ளியின் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்குச் செல்வதற்காக ஏற்கனவே பிரதான சாலையின் குறுக்கே சாலையை எளிதில் கடக்கும் வகையில் பாதசாரிகளுக்கான வசதிகள் இருந்தன. ஆனால், திருமங்கலத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தபிறகு சாலையைக் கடக்கும் வசதி இல்லை.
மேலும் தற்போது சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுவிட்டதால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், தடுப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்களில் பள்ளிக்குச் செல்வோர், கோயம்பேடு வரைச் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து காவல் இணை ஆணையர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சம்பந்தப்பட்ட பகுதியில் சாய்தள நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடைமேம்பாலம் அமைக்க கோரியுள்ள இடம் மாநில நெடுஞ்சாலையில் வருவதால், நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கில் மாநில நெடுஞ்சாலை செயலாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்து, இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.