ரயில்வே போலீஸாரை கண்காணிக்க இ-பீட் செல்லிடப்பேசி செயலி அறிமுகம்
By DIN | Published On : 03rd July 2019 04:27 AM | Last Updated : 03rd July 2019 04:27 AM | அ+அ அ- |

ஓடும் ரயில்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், அவர்களைக் கண்காணிக்கவும் இ- பீட் என்றும் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேரன், நீலகிரி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய விரைவு ரயில்களில் இந்த செல்லிடப்பேசி செயலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் தமிழக ரயில்வே போலீஸாரும் (ஜி.ஆர்.பி), ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆர்.பி.எஃப்) ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ரயில்வே போலீஸார் ஓடும் ரயில்களில் சரியாக செயல்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஓடும் ரயில்களில் பணியில் ஈடுபடும் ரயில்வே போலீஸார், ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போது, செல்லிடப்பேசியில் செல்பி (சுயபடம்) எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதிலும் சில போலீஸார் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இவர்களைக் கண்காணிக்கவும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் இ -பீட் என்னும் செல்லிடப்பேசி செயலி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சேரன், நீலகிரி ஆகிய ரயில்களில் இந்த செல்லிடப்பேசி செயலி வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: ஓடும் ரயில்களில் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படும் போலீஸார் இ-பீட் என்னும் செல்லிடப்பேசி செயலியை தங்கள் நவீன செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ரயில்களின் முதல் மற்றும் கடைசி பெட்டிகளில் கியூ ஆர் கோடு எனப்படும் சங்கேத குறியீடுகள் உள்ள படம் ஒட்டப்பட்டு இருக்கும். அதுபோல, ரயில் நிலைய சுவர்களிலும் ஒட்டப்பட்டிருக்கும். ரயில் நிற்கும் நிலையங்களில் போலீஸார் இறங்கி கியூ ஆர் கோட்டை இ- பீட் செல்லிடப்பேசி செயலி வழியே ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் பதிவாகிவிடும். மேலும், ரயில்வே காவல் அதிகாரிகளும் கண்காணிக்க முடியும். இதனால், ஓடும் ரயிலில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பதை உறுதி செய்ய முடியும். மேலும், அவர்கள் பயணிக்கும் பெட்டிகளையும், ரயிலின் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனரா எனவும் கண்காணிக்க முடியும்.
முதல்கட்டமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சேரன், நீலகிரி, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் இந்த செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.