கட்டடம் இடிந்து விபத்து: 4 பேர் காயம்
By DIN | Published On : 09th June 2019 02:52 AM | Last Updated : 09th June 2019 02:52 AM | அ+அ அ- |

சென்னை கொளத்தூரில் சனிக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 4 பேர் பலத்தக் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கொளத்தூர் டாக்டர் அம்பேத்கர் நகர் 3-ஆவது தெருவில் கில்பர்ட் என்பவருக்கு சொந்தமான பழைமையான வீடு உள்ளது.
இந்த வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாள்களாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வீட்டின் தரை மட்டத்தை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணியும் நடைபெறுகிறது.
இந்தப் பணி சனிக்கிழமை மாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென அந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (38), அந்தோணிசாமி (41), கதிர்வேல் (60), அம்சவள்ளி (32) ஆகிய 4 பேர் கட்டட இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரையும் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக கொளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.