தலைக்கவசம் அணியாமல் காவல் ஆய்வாளரிடம் தகராறு: இருவர் கைது
By DIN | Published On : 09th June 2019 02:50 AM | Last Updated : 09th June 2019 02:50 AM | அ+அ அ- |

சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாமல் காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் சுவாமிநாதன் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்த ஐஸ் ஹவுஸ் டி.பி.கோயில் தெருவைச் சேர்ந்த வி.சத்தியநாராயணன் (27), திருவல்லிக்கேணி எம்.ஏ.சாஹிப் தெருவைச் சேர்ந்த ம.தயாநிதி (28) ஆகிய இருவரை சுவாமிநாதன் தடுத்து நிறுத்தினார். ஆனால், அவர்கள் இருவரும், சுவாமிநாதனிடம் தகராறு செய்தனராம்.
இதனால் சுவாமிநாதன், அந்த மோட்டார் சைக்கிளின் சாவியை எடுக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவர்கள் இருவரும் சுவாமிநாதன் கையை தட்டிவிட்டு, தகராறு செய்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே அங்கு ரோந்து வந்த மெரீனா சட்டம்-ஒழுங்கு போலீஸார் இருவரையும் காவல் நிலையத்துக்கு பிடித்துச் சென்றனர். பின்னர் ஆய்வாளர் சுவாமிநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சத்தியநாராயணன், தயாநிதி மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.