நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கனடா தம்பதியிடம் ரூ.4 லட்சம் திருட்டு
By DIN | Published On : 09th June 2019 02:50 AM | Last Updated : 09th June 2019 02:50 AM | அ+அ அ- |

சென்னை மயிலாப்பூரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கனடா நாட்டு தம்பதியிடம் ரூ.4 லட்சம் திருடப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கனடா நாட்டைச் சேர்ந்தவர் பஞ்சரத்தினம். இவரது மனைவி கவிதா என்ற கனகசூரியா. இவர்கள் இருவரும் கடந்த வாரம் சென்னை வந்தனர். இங்கு மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் அந்த ஹோட்டலின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, தங்களது அறைக்குச் சென்றனர். அப்போது, அறையில் வைத்துச் சென்ற ரூ.4 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.