நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள் கூடாது: டாக்டர் வி. சாந்தா வலியுறுத்தல்
By DIN | Published On : 09th June 2019 02:45 AM | Last Updated : 09th June 2019 02:45 AM | அ+அ அ- |

புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு கூடுதல் பணச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்று அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா வலியுறுத்தினார்.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் புற்றுநோய் மறுவாழ்வு தொடர்பான மருத்துவ மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடங்கி வைத்து டாக்டர் வி. சாந்தா பேசியதாவது: நம் நாட்டில் மருத்துவத் தொழில்நுட்பம் பல மடங்கு மேம்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு மருத்துவ சாதனங்களும், மருந்துகளும் சந்தையில் நாள்தோறும் அறிமுகமாகி வருகின்றன.
அத்தகைய சாதனங்கள் மருத்துவமனைகளில் இருக்கின்றன என்கிற ஒரே காரணத்துக்காகவே நோயாளிகளுக்கு தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களிடம் தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை பரிந்துரைப்பது ஏற்புடையது அல்ல.
மருத்துவ சாதனங்களையும், மருந்துகளையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவற்றை சந்தைப்படுத்தி, வியாபாரம் செய்வதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன. அவற்றைக் கண்காணித்து முறைப்படுத்துவது அவசியம்.
புற்றுநோய் இருப்பது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எந்த வகையில் மறுவாழ்வு அளிக்கலாம் என்பதைத்தான் முதலில் மருத்துவர்கள் சிந்திக்க வேண்டும்.
அவரது நோயின் தாக்கம், அதன் விவரங்கள் அனைத்தையும் நோயாளிகளின் குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
மருத்துவர்கள் அளிக்கும் தகவல்கள் நோயாளிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, மனத்தாங்கலை உண்டாக்கக் கூடாது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திரா மருத்துவக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் விஜயராகவன், மருத்துவர்கள் மகேஷ், ஜெகதீஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.