புழல் சிறைப் பகுதியில் கைதிகளே இயக்கும் புதிய பெட்ரோல் நிலையம்
By DIN | Published On : 14th June 2019 04:20 AM | Last Updated : 14th June 2019 04:20 AM | அ+அ அ- |

சென்னை புழல் சிறைப் பகுதியில் கைதிகளே இயக்கும் வகையிலான பெட்ரோல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இந்த நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியை சிறைத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கைதிகளே இயக்கும் பெட்ரோல் நிலையங்களைத் திறப்பது என கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக சிறைத்துறை முடிவு செய்தது. இதற்கான திட்டம், சிறைத்துறையால் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் உள்துறையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் உள்துறையின் அனுமதி கிடைக்காமல் இருந்தது.
இதனால், இந்தத் திட்டம் காத்திருப்பில் இருந்தது. இந்நிலையில் கைதிகளின் நலன் கருதி சிறைத்துறை அதிகாரிகள், இந்தத் திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, தமிழக உள்துறை அதிகாரிகளிடம் திட்டத்தின் சாதக அம்சங்களை எடுத்துரைத்தனர்.
இதன் காரணமாக, இந்தத் திட்டத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பு அனுமதி கிடைத்தது. இதையடுத்து, இப்போது புழல் சிறைப் பகுதியில் பெட்ரோல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அதனைத் திறந்தார். இந்த பெட்ரோல் நிலையத்தில் சுமார் 20 முதல் 25 கைதிகள் வரை பணியில் இருப்பர்.