கல்லூரி மாணவிகளுக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை
By DIN | Published On : 06th March 2019 04:30 AM | Last Updated : 06th March 2019 04:30 AM | அ+அ அ- |

மகளிர் தினத்தையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) கல்லூரி மாணவிகளுக்கு இலவச சர்க்கரை மற்றும் விழித்திரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து, புனித இசபெல் மருத்துவமனையின் சர்க்கரை சிகிச்சைத் துறை முதுநிலை மருத்துவர் டாக்டர் ஜலஜா ரமேஷ் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: உலகம் முழுவதும் தற்போது சர்க்கரை நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியா அதில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதிலும், நம் நாட்டில் பெண்கள் அதிகஅளவில் சர்க்கரை நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இந்திய மக்களுக்கு சராசரியாக 40 வயதில் அந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதற்கும் குறைந்த வயதினருக்கு கூட சர்க்கரை பாதிப்பு ஏற்படுவதைக் காண முடிகிறது.
உரிய விழிப்புணர்வு இல்லாததும், வாழ்க்கை முறை மாற்றமும்தான் இதற்கு முக்கியக் காரணம். வளர் இளம் பருவத்தினருக்கு இதுகுறித்த புரிதல்களை ஏற்படுத்துவது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறையினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். அதன் ஒரு பகுதியாக வரும் 8 ஆம் தேதி நடைபெறும், மகளிர் தினத்தில் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சர்க்கரை பரிசோதனை, கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் கல்வி நிறுவனத்தில் அந்த முகாம் நடைபெற உள்ளது என்றார் அவர்.