ரூ. 7-க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
By DIN | Published On : 06th March 2019 04:22 AM | Last Updated : 06th March 2019 04:22 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2019-20- நிதி ஆண்டுக்கான பட்ஜெட் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில், ரூ. 7-க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 100 புதிய பூங்காக்கள், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அதிகாரியின் நிர்வாகத்தின்கீழ் வெளியிடப்படும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
இது குறித்து , அவர் கூறியதாவது: 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ. 5,697.55 கோடியாகவும், மொத்தச் செலவினம் ரூ. 5,743.87 கோடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 46.32 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,300 கோடியில் நடைபெற்று வரும் அடையாறு மழைநீர் வடிகால் திட்டம், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கொசஸ்தலை, கோவளம் வடிநிலப் பகுதிகளில் ரூ. 4,000 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நிதி மூலங்கள் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
பட்ஜெட் சிறப்பம்சங்கள்: மின் நுகர்வைக் குறைக்கும் வகையில் ரூ. 171 கோடி செலவில் தெருவிளக்குகள் இயக்கத்தை ஒருங்கிணைந்து கண்காணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ரூ. 53.47 கோடி செலவில் பூங்காக்கள் இல்லாத வார்டுகளில் 100 புதிய பூங்காக்கள், விளையாட்டுத் திடல் அமைக்கப்படும். சமுதாய குடிநீர் வழங்கல் மையம் அனைத்து வார்டுகளிலும் அமைக்கப்படும். அதன் மூலம், 2029-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ. 7-க்கு வழங்கப்படும்.
ரூ. 420 கோடி செலவில் உலக வங்கி நிதி உதவியுடன், மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்படும். ரூ. 227.70 கோடி செலவில் யானைக்கவுனி சாலை உள்ளிட்ட 6 இடங்களில் பாலம் அமைப்படும். ரூ. 25 கோடி செலவில் துப்புரவுப் பணிக்காக பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், குப்பை கிடங்கு பணிகள் மேற்கொள்ளப்படும். உலர்ந்த, மக்காத மீட்கக் கூடிய கழிவுகளை தரம் பிரிக்கும் முறை கடுமையாகப் பின்பற்றப்படும். அதில், கிடைக்கும் வருவாய் துப்புரவுப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மறுசுழற்சி பொருள்களை திறன் மேம்பாட்டுடன் மறுசுழற்சி செய்ய தொழிலகங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் கழிவுகள் முறையாக மாற்று உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படும். ரூ. 537.22 கோடி மதிப்பில் உட்புற, பேருந்து சாலைகள் அமைக்கப்படும்.
ரூ. 8.20 கோடியில் பள்ளிகளுக்கான கணினிகள், ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்கப்படும். ரூ. 165 கோடியில் பள்ளி, அலுவலகக் கட்டங்கள் கட்டப்படும். ரூ.3.10 கோடியில் கொசு ஒழிப்புப் பணி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
ரூ.175 கோடியில் மெரீனா கடற்கரையொட்டிய சாலை பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைத்தல், நிர்பயா திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.60 கோடியும், மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.