3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் பேரவைத் தொகுதியில் 156 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 04:13 AM | Last Updated : 28th March 2019 04:13 AM | அ+அ அ- |

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 3 மக்களவைத் தேர்தல், பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 245 மனுக்களில் 156 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 89 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்கியது. தொடர்ந்து 8 நாள்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 26) முடிவடைந்தது. 3 மக்களவை, பெரம்பூர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட மொத்தம் 209 பேர் 245 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
156 பேரின் மனுக்கள் ஏற்பு: தென் சென்னையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஆர்.ரங்கராஜன், அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 42 பேரின் மனுக்களும், வட சென்னையில் திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மௌரியா, அமமுக வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணன், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 24 பேரின் மனுக்களும், மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாமக வேட்பாளர் சாம்பால், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமீலா நாசர், அமமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ வேட்பாளர் தெஹ்லான் பாகவி, பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 39 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரியதர்ஷினி, அமமுக வேட்பாளர் வெற்றிவேல், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 51 பேரின் மனுக்கள் என 3 மக்களவை, பெரம்பூர் சட்டப் பேரவை ஆகியவற்றில் வேட்பு மனு தாக்கல் செய்த 156 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...