சுங்கத்துறை அதிகாரிகள் போல நடித்து சென்னையிலுள்ள பணப்பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.27 லட்சத்தைத் திருடிச் சென்ற மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு அமித்மீரான் (55) என்பவர் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அமித் மீரான் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வெளியில் சென்றார்.
அப்போது, நிறுவனத்தில், அவரது மகன்கள் காஜாமைதீன் (35), நசீர் (35) மற்றும் பணியாளர்கள் முகமது, பஷிர் ஆகியோர் இருந்துள்ளனர்.இந்நிலையில்,ஒரு காரில் வந்திறங்கிய 5 பேர் திடீரென அந்தக் கடைக்குள் நுழைந்து தாங்கள் சுங்கத்துறையுடன் இணைந்த தேர்தல் பறக்கும்படை என்று கூறி அடையாள அட்டைகளைக் காண்பித்து, அனைவரது செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்ததுடன், அந்நிறுவனத்தில் வைத்திருந்த ரூ. 27 லட்சம் பணத்தையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து பணத்துடன், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் கழற்றி எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து காஜாமைதீன், நசீர் இருவரையும், தாங்கள் வந்த ஜீப்பில் அழைத்துச்சென்றனர். பணத்தை அரசு கருவூலத்தில் கட்டினால் திரும்பப் பெறுவது மிகவும் கடினம் என்று கூறிய மர்ம நபர்கள், உங்கள் தந்தையை அழைத்துக் கொண்டு சுங்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, தீவுத்திடல் அருகே இருவரையும் இறக்கிவிட்டுச் சென்றனர்.
இதன்பிறகே, தாங்களை ஏமாற்றியது மோசடி கும்பல் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து, அமித்மீரான் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்தனர். இந்த நூதனத்திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.