சென்னையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் வீட்டில் கணக்கில் வராத ரூ.15.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் விரைவில் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சபேஷன். அரசு ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். சென்னை மாநகராட்சியிலும் ஒப்பந்தப் பணிகளை செய்கிறார். இந்நிலையில் கர்நாடக மாநில அமைச்சர் புட்டராஜின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.
இச் சோதனை அங்குள்ள புட்டராஜியிடம் தொடர்பில் உள்ள 13 ஒப்பந்ததாரர்கள், 4 பொறியாளர்கள் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள் என 24 இடங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அமைச்சர் புட்டராஜியிடம் நெருங்கிய தொடர்பில் உள்ள சபேஷன் பெங்களூரு வீட்டிலும், அலுவலகத்திலும் நடைபெற்றது.
இந்த சோதனை சென்னையில் உள்ள சபேஷனுக்கு சொந்தமான வீடு உள்பட 3 இடங்களிலும், அவரது நண்பர் ஒருவர் வீட்டிலும் நடைபெற்றது. இதில் சபேஷன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.15.13 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
இதில் சபேஷனின் நண்பர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.77 லட்சத்தை வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
விரைவில் அழைப்பாணை: இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, சபேஷனுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்ப வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அழைப்பாணை பெற்று ஆஜராகும் சபேஷனிடம் அவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.