மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நிறைவு: கணக்கில் வராத ரூ.5.8 கோடி பறிமுதல்
By DIN | Published On : 05th May 2019 02:24 AM | Last Updated : 05th May 2019 02:24 AM | அ+அ அ- |

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த சோதனை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.5.8 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின்போது மார்டின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பழனியிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள நீர்நிலையில், பழனியின் உடல் சடலமாகக் கண்டறியப்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாள்களாக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த சோதனை சனிக்கிழமை நிறைவடைந்தது.
இதுகுறித்து, வருமான வரித் துறையினர் கூறியதாவது:
கணக்கில் வராத ரூ.595 கோடி லாட்டரி முகவர்களிடம் இருந்து திரட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தத் தொகைக்கான கணக்கு காட்டப்படவில்லை. மேலும், ரூ.619 கோடி அளவுக்கு கணக்கில் வராத வகையில் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. ரூ.24.57 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் கணக்கில் காட்டப்படவில்லை. அதே போல், சோதனையின்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பல்வேறு நகரங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.8.25 கோடி ரொக்கப் பணம் கணக்கில் காட்டப்படாதது கண்டறியப்பட்டு, அதில் ரூ.5.8 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பழனியை அழைக்கவில்லை: மார்ட்டினுக்குச் சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்த பழனி என்பவர் இறந்தது துரதிருஷ்டவசமானது. இதற்கான காரணங்கள் என்ன என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவரும். அவரது இல்லத்தில் நடந்த சோதனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
அதன்பின், வருமான வரித் துறை அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரை நாங்கள் விசாரணைக்கு அழைக்கவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.