ஏடிஎம் கார்டு மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்: இன்டர்போலுக்கு தகவல் அளிக்க முடிவு
By DIN | Published On : 15th May 2019 04:08 AM | Last Updated : 15th May 2019 04:08 AM | அ+அ அ- |

சென்னையில் ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இருவர் குறித்த தகவல்களை சர்வதேச போலீஸாரிடம் (இன்டர்போல்) தெரிவிக்க, சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் நிர்வாகம், தங்களது ஹோட்டலில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு வெளிநாட்டு நபர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் கடந்த வாரம் புகார் செய்தது. அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பீட்டர் வெளிகோவ் என்பதும், அவர் தனது கூட்டாளி அதே நாட்டைச் சேர்ந்த லயன் மாக்கோவுடன் சேர்ந்து சென்னையில் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடி, அந்த தகவல்களை போலி கார்டுகளில் பதிவேற்றம் செய்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 42 போலி ஏடிஎம் கார்டுகள், ரூ.10 லட்சம் ரொக்கம், ரூ.3 லட்சம் மதிப்புக்கான அமெரிக்க டாலர், 2 மடிக்கணினி, போலி ஏடிஎம் கார்டு தயாரிக்க பயன்படும் என்கோடர், ஸ்கிம்மர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இன்டர்போலுக்கு தகவல்: இது தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் இருவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில், இருவரும் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், இவர்களது கூட்டாளிகள் பல்வேறு நாடுகளில் இருப்பதும் தெரிய வந்திருப்பதையடுத்து மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் இவர்களது கூட்டாளிகளையும், கைது செய்யும் வகையில் இன்டர்போலிடம் தெரிவிக்க சென்னை காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இக் கும்பலின் சர்வதேச தொடர்புகளை கண்டறியவும், அவர்களை கைது செய்து முடக்கவும் முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.