குற்றச் செய்திகள்... தொட்டில் சேலை இறுக்கி சிறுமி பலி
By DIN | Published On : 19th May 2019 05:04 AM | Last Updated : 19th May 2019 05:04 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை ஐ.சி.எப்.பில் தொட்டில் சேலை இறுக்கி சிறுமி இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி எம்.சி. பள்ளி குறுக்குச் சாலை பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகள் அஸ்வதி (11) 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையையொட்டி, சென்னை அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் மாமா மு.வினோத்குமார் வீட்டுக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தார். வினோத்குமார் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றார். அவரது மனைவி தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில் வீட்டில் அஸ்வதி மட்டும் தனியாக இருந்தார். வினோத்குமாரின் உறவினர் ஈஸ்வரன் வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக அவர் பார்த்தபோது அஸவதி, தொட்டில் சேலை இறுக்கி மயங்கி கிடப்பதைக் கண்டார்.
அதையடுத்து கதவு உடைக்கப்பட்டு அஸ்வதி மீட்கப்பட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஐ.சி.எப்.போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
விபத்தில் இளைஞர் மரணம்
போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் பூமாதேவிநகரைச் சேர்ந்தவர் அ.லாரன்ஸ் (39). வெள்ளிக்கிழமை இரவு ஆலப்பாக்கம் ராம்தாஸ் சாலையில் சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்துள்ளது. அப்போது லாரன்ஸின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே லாரன்ஸ் உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருட்டில் ஈடுபட்டவர் கைது
வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி 4-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சா.மகேஷ். அவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் யாரோ பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் கோடம்பாக்கம் அஜீஸ் நகரைச் சேர்ந்த கோ.வடிவேல் என்ற ஹரியை (40) சனிக்கிழமை கைது செய்தனர்.
ரூ.6 லட்சம் செல்லிடப்பேசிகள் திருட்டு
சென்னை அண்ணாநகர் கிழக்கு 18-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் தி.முகமது முஸ்தபா (51). இவர், வில்லிவாக்கம் பாட்டை சாலையில் செல்லிடப்பேசி விற்பனை கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை காலை இவர் கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், ரூ.97 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தன. ஐ.சி.எப். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட் வழக்கு: மேலும் இருவர் கைது
போலி பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) வழக்கில், மேலும் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஜெராக்ஸ் கடை ஊழியர்கள் உதவியுடன் பலரது ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றின் நகல்களை ஒரு கும்பல் பெற்று, அதன் மூலம் போலி பாஸ்போர்ட்களை பெற்று வருவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி தலைமையில் அந்தக் கும்பல் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வி உள்பட 13 பேரை க்யூ பிரிவினர் கடந்த 10-ஆம் தேதி கைது செய்தனர். மேலும் சென்னையில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சுரேந்திரன், ஹரிஹரன், நிஷாந்தன் ஆகிய 3 பேரை கடந்த 12-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் 14 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இவ் வழக்குத் தொடர்பாக சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஷே.சாகுல் ஹமீது (51), கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சு.சின்னய்யா என்ற ராஜன் (48) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.