தீ விபத்து:12 குடிசைகள் எரிந்து நாசம்
By DIN | Published On : 19th May 2019 05:07 AM | Last Updated : 19th May 2019 05:07 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் டுமீல் குப்பத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 12 குடிசைகள் எரிந்து நாசமாகின.
சென்னை பட்டினப்பாக்கம் டுமீல் குப்பம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடிசைகளில் வசிப்பவர்கள் அதிக வெப்பம் காரணமாக மெரீனா கடற்கரைப் பகுதிக்குச் சென்று தூங்கினர். சிலர் மட்டுமே குடிசைகளில் தூங்கினர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள ஒரு குடிசை திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை ஆகியப் பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 12 குடிசைகள் முழுமையாக எரிந்து நாசமாகின. இதில் அந்த குடிசைகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் , தங்க நகை, சான்றிதழ்கள், பணம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன.
இது குறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இச் சம்பவத்தில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் கடற்கரைக்குச் சென்று தூங்கியதால் உயிர் தப்பினர்.