பாதை மூடப்பட்டதை கண்டித்து நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 19th May 2019 05:09 AM | Last Updated : 19th May 2019 05:09 AM | அ+அ அ- |

தாம்பரம்: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் கடக்கும் பாதை மூடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் கடந்து செல்ல பயன்படுத்தி வந்த பாதையை மீண்டும் திறக்கக் கோரியும் காவல் துணை கண்காணிப்பாளர் வளவனிடம் அப் பகுதியினர் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: நாளுக்குநாள் கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக கூடுவாஞ்சேரி, அதை சுற்றிலும் வசித்து வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், கனரக லாரிகள், கார்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக கூடுவாஞ்சேரி சிக்னலில் மணிக்கணக்கில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் சாலையைக் கடந்து செல்ல முடியவில்லை. தினமும் பெருங்களத்தூரில் தொடங்கி , வண்டலூர், ஓட்டேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் சர்வீஸ் சாலையில் அதிகரித்துள்ள கடைகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி சாலையைக் கடக்க கூடுவாஞ்சேரியில் மேம்பாலம் கட்டவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.