"பிக்பாஸ் 3' டீசர் வெளியீடு: அடுத்த மாதம் நிகழ்ச்சி தொடக்கம்
By DIN | Published On : 19th May 2019 05:03 AM | Last Updated : 19th May 2019 05:03 AM | அ+அ அ- |

சென்னை: கமல்ஹாசன் மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கவுள்ள "பிக்பாஸ் 3'-ஆம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் "பிக்பாஸ்' நிகழ்ச்சி 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் கலந்துகொண்ட ஓவியா, ஆரவ், ரைசா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றனர். கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது பாகத்தில் ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் இரண்டு பாகங்களும் பெரும் அளவில் வெற்றி பெற்றதால், தற்போது மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது.
ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும் "பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருப்பதால் மூன்றாம் பாகத்தில் கலந்துகொள்வாரா? என்று செய்திகள் வரத்தொடங்கின. கமல் தொகுத்து வழங்கும் பாணிக்காகவே இதன் டிஆர்பி ரேட்டிங் குறையாமல் இருந்து வரும் நிலையில், இந்தச் செய்தி "பிக்பாஸ்' ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கியது. மேலும், நடிகை நயன்தாரா மூன்றாவது பாகத்தை தொகுத்து வழங்கவுள்ளார் என்றும் செய்திகள் அடிபட்டு வந்தன. இந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில், சில நாள்களுக்கு முன் கோகுலம் ஸ்டுடியோவில் "பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்கான விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், "பிக் பாஸ் 3' விரைவில் வெளிவரும் என்பதைத் தெரிவிக்கும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதனால் "பிக்பாஸ்' ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அரசியல் களத்தில் தனது பேச்சுக்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கமல்ஹாசன், தேர்தலுக்குப் பின் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார். இதனால், இந்நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.