தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 26th May 2019 04:02 AM | Last Updated : 26th May 2019 04:02 AM | அ+அ அ- |

தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னை சீராகும் எனத் தெரிகிறது.
நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வரும் திங்கள்கிழமை (மே 27) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் அறிவித்தார்.
நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும். கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும். பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. எங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்கள் மேலும் அவதிப்படுவர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.