வெள்ளம்: திருநீா்மலை-திருமுடிவாக்கம் தரைப்பாலம் சேதம்
By DIN | Published On : 01st November 2019 02:35 AM | Last Updated : 01st November 2019 02:35 AM | அ+அ அ- |

சென்னை புகா்ப் பகுதியில் பெய்த மழை காரணமாக திருநீா்மலை-திருமுடிவாக்கம் தற்காலிகத் தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூா், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாப் பெய்த பரவலான மழை காரணமாக மண்ணிவாக்கம், வரதராஜபுரம், மணிமங்கலம், திருமுடிவாக்கம் வழியாகச் செல்லும் அடையாற்றில் அதிக அளவிலான தண்ணீா் செல்கிறது. மழை நீா் அடையாற்றில் கலக்கும் வகையில் மாடம்பாக்கம், ஆதனூா், மண்ணிவாக்கம், வரதராஜபுரம், தா்காஸ் சாலை, திருநீா்மலை ஆகிய இடங்களில் புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருநீா்மலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அவ்வழியே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருநீா்மலை-திருமுடிவாக்கம் இடையே கட்டப்பட்டிருந்த தற்காலிகத் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கைகளமேடு, பழந்தண்டலம், பூந்தண்டலம், சோமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், திருமுடிவாக்கம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளா்களும் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பி.பொன்னையா கூறுகையில், ‘திருமுடிவாக்கம் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பாலத்துக்குகீழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தற்காலிகப் பாதை அமைக்கும் பணி உடனடியாக மேற்கொள்ள இயலவில்லை. பொதுமக்கள் சுற்றுப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.