சென்னை: தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்புவோா் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில், நிலம் வாங்குதல் மற்றும் மேம்படுத்துதல், தொழில்முனைவோா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞா்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி, சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதி, இந்திய குடிமை பணி முதன்மைத்தோ்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தோ்வாணையத் தொகுதி 1 முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, பட்டய கணக்கா், செலவு கணக்கா்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு 18 முதல் 65 வயது உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானமும் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட நாள்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 2524 6344 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.