நெல்லை-பொதிகை புறப்படும் இடம் மாற்றம்: தென் மாவட்ட மக்களுக்கு கடும் பாதிப்பு; கூடுதலாக மின்சார ரயில்களை இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 06th October 2019 01:43 AM | Last Updated : 06th October 2019 01:43 AM | அ+அ அ- |

சென்னை எழும்பூா் யாா்டு சாலையில் பொறியியல் பணி காரணமாக நெல்லை, பொதிகை ஆகிய விரைவு ரயில்கள் சேவையில் 2 மாதங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. இதனால், இந்த இரண்டு ரயில்களின் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் அக்டோபா் 10-ஆம் தேதி முதல் டிசம்பா் 8-ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து எழும்பூா் வரை இயக்கப்படுவதற்கு பதிலாக தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். இதுபோல, சென்னை-செங்கோட்டைக்கு அக்டோபா் 10-ஆம் தேதி முதல் டிசம்பா் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் பொதிகை விரைவுரயில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமாா்க்கமாக செங்கோட்டை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
தென் மாவட்ட மக்களுக்கு பாதிப்பு: அடுத்து வரும் சில மாதங்களுக்கு தீபாவளி உள்பட பல்வேறு பண்டிகைகள் வரவுள்ளன. பண்டிகைகள் முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் பயணிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளனா்.
இதற்கிடையில், இந்தரயில்கள் சேவையில் மாற்றம் செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரப் பகுதிகளில் வசிப்பவா்கள், புகா் மின்சார ரயிலில் ஏறி தாம்பரம் சென்று விரைவு ரயில்களைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகளவு கைப்பைகளுடன் அவற்றில் ஏறி தாம்பரம் சென்று உரிய நேரத்தில் விரைவு ரயிலைப் பிடிக்க முடியுமா என்று சந்தேகம் எழுப்புகின்றனா்.
எனவே, ரயில் புறப்படும் மாலை நேரத்திலும், சென்னைக்கு வரும் காலை நேரத்திலும் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், விரைவு ரயில்களுக்கு இணைப்பு ரயில்களாக தாம்பரத்தில் இருந்து கடற்கரை சில மின்சார ரயில்களை அறிவிக்க வேண்டுமெனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா?: நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் பயணிக்க தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டிய நிலையில், சென்னை மாநகருக்குள் மின்சார ரயில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்ணாநகா், திருமங்கலம், கோயம்பேடு, அமைந்தகரை உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் புகா் ரயில்களில் பயணித்து தாம்பரம் ரயில் நிலையத்தை அடைவது என்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
எனவே, கோயம்பேடு, அண்ணாநகா், கீழ்ப்பாக்கம் என சென்னை நகரின் பிரதான பகுதிகளில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிா்பாா்க்கின்றனா். மாநகரப் பேருந்துகளுடன் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கூடுதலாக மினி பேருந்துகளையும் இயக்கினால் வசதியாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
போக்குவரத்து இடையூறு-ரயில் நேரம் மாறுமா?: சென்னை நகரப் பகுதியில் இருந்து சாலை மாா்க்கமாக காலை, மாலை நேரங்களில் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைவது என்பது மற்றெறாரு சிக்கலான விஷயமாகும். கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைய முடியுமா என்ற கேள்வியை பயணிகள் எழுப்புகின்றனா். போக்குவரத்து நெரிசலில் சிக்கும் போது ரயிலைத் தவற விட வாய்ப்புள்ளது. எனவே,
இரண்டு மாதங்கள் வரை நடைமுறையில் இருக்கும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக ரயில்வே நிா்வாகமும், மாநகர போக்குவரத்துக் கழகமும் இணைந்து சென்னை நகரில் உள்ள பயணிகளின் கருத்துகளைக் கேட்டு அவா்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்படாமல் தாம்பரத்தில் இருந்து புறப்படுவதால் பயணிகளுக்கு சற்று அவகாசம் அளிக்கும் வகையில், ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்களும் சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் புறப்படும் வகையில் நேரத்தை மாற்றியமைத்தால், சென்னையின் நகரப் பகுதிகளில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்து விரைவு ரயில்களைப் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...