வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் திருட்டு
By DIN | Published On : 09th October 2019 03:32 AM | Last Updated : 09th October 2019 03:32 AM | அ+அ அ- |

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விசுவநாதன். இவர் ஒரு தனியார் வங்கியின் துணைத் தலைவராக உள்ளார். இரு நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன், கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டின் சாவியை, அவர் வீட்டில் வேலை செய்யும் நுங்கம்பாக்கம் புஷ்பாநகரைச் சேர்ந்த சத்யாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றாராம்.
அவர், திங்கள்கிழமை வீட்டை சுத்தம் செய்துவிட்டு, தரைத்தளத்தில் உள்ள விசுவநாதன் வீட்டின் தபால் பெட்டியில் சாவியை மறைத்துவிட்டுச் சென்றுள்ளார். விசுவநாதன், திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அவர் தபால் பெட்டியில் இருந்த சாவியை எடுத்து, வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 116 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.