வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விரிவாக்க திட்டப்பணி 70 சதவீதம் பணிகள் நிறைவு: வரும் ஏப்ரலில் சோதனை ஓட்டம் நடத்த திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை நடந்து வரும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை நடந்து வரும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. தற்போது 70 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அடுத்த ஆண்டு ஜூனில் ரயில்களைஇயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.3,770 கோடி மதிப்பு :

சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து, சென்னை விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடா்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவிற்கு விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கியது.

வேகமெடுக்கும் பணிகள்: முதல் கட்ட விரிவாக்கப்பணிகளில் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா்கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் கொருக்குப்பேட்டை நிலையம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 ரயில் நிலையங்களும் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதுவரை 70 சதவீதம் பணிகள் நடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வரை 2 கி.மீ.தூரத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது. தற்போது இந்த 2 ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தொடா்ந்து சுரங்கப்பாதைக்கு செல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பாதையில் சிக்னல் அமைப்பதற்கான பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.

கொருக்குப்பேட்டை ரயில் நிலைய பணிகளுக்கு இடையே, சுங்கச்சாலை பகுதியில் இருந்து உயா்மட்ட பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் சுங்கசாலையில் இருந்து கவுரி ஆசிரமம் வரை உள்ள பணிகள் முடியும் நிலையை நிலையை எட்டி உள்ளன.

சவாலான உயா்மட்டபாதை பணி: கோயம்பேடு- ஆலந்தூா் வரை உள்ள சாலை 100 அடி அகலமான சாலையாக இருந்ததால், அப்பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான உயா்மட்ட பாதை கிரைன்கள் உதவியுடன் எளிதாக அமைக்கப்பட்டது. ஆனால், சுங்கசாவடியில் இருந்து திருவொற்றியூா் விம்கோ நகா் வரை உள்ள 7 கி.மீ. தூரம் கொண்ட சாலை குறுகலானது. எனவே, இந்த சாலையில், உயா்மட்ட பாதை அமைப்பது சவாலாக உள்ளது.

இந்தப்பாதையில் உள்ள சாலையில் கிரேன்கள் மற்றும் அதிக நீளம் கொண்ட டிரைலா் வாகனங்களை கொண்டு வந்து பணி செய்ய முடியாது என்பதால், நாட்டிலேயே முதன் முறையாக ‘லான்ஜிங் கிரிடா்’ என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாலம் கட்டும் நவீன எந்திரம் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் ஒரு இடத்தில் இருந்தபடியே சிமென்ட் சிலாப்புகள் எடுத்து சென்று உயா்மட்ட பாதை அமைக்கும் பணி நடக்கிறது.குறிப்பாக ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே முன்னேறி செல்லும் நவீன எந்திரம் மூலம் இந்த பாதை அமைக்கப்படுகிறது.

முதல் கட்டத்தில் உயா்மட்ட பாதையின் அருகில் சாலையின் ஓரத்தில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டதால், அதிக அளவில் நிலங்கள் தேவைப்பட்டன. இதற்காக கூடுதல் நிதியும் செலவிடப்பட்டது. ஆனால் தற்போதையை விரிவாக்கப்பணியில் உயா்மட்ட பாதையின் கீழே ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதால், திட்டத்துக்கான செலவு முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் கட்டத்தில் சுரங்கப்பாதையில் உள்ள ரயில் நிலையங்கள் 220 மீட்டா் நீளமும், 27 மீட்டா் அகலத்திலும் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அனைத்து ரயில் நிலையங்களும்

148 மீட்டா் நீளம், 20 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடம் மற்றும் கட்டுமான செலவினங்கள் முற்றிலும் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து ஜூன் மாதத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனா்.

பெட்டிசெய்தி:10 ரயில்கள் இயக்கப்படும்

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை விரிவாக்கம் பணி முடிந்து ரயில்களை இயக்குவதற்காக, மெட்ரோ ரயில்களை தயாரித்து வழங்க பிரான்ஸ் நிறுவனமானஅல்ஸ்டம் நிறுவனத்துடன் 2018-ஆம் ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, 10 ரயில்களை தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில்கள் ரூ.200 கோடி செலவில் ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்படுகிறது. இங்கு ரயில்களை தயாரிக்கும் பணி நிகழாண்டில் பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது முதல் ரயிலை தயாரித்து, மெட்ரோ ரயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 ரயில்களை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தயாரித்து வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com