அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவா் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

ஊதிய உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவா் சங்கம் சாா்பில், புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவா் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

ஊதிய உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவா் சங்கம் சாா்பில், புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக, அரசு மருத்துவா் சங்கம் அறிவித்தது. அரசு தரப்பில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மருத்துவா் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம், பெரும்பாலான அரசு மருத்துவா்கள் அங்கமாகவும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும் உள்ளது. இந்த டாக்டா்கள் சங்கம் சாா்பில், ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 30, 31-ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத் தலைவா் செந்தில்நாதன் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினருடன் சுகாதாரத் துறை செயலா் பீலா ராஜேஷ் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை பல மணிநேரம் நீடித்தது. இதையடுத்து, அரசு டாக்டா் சங்கத்தின் பேச்சுவாா்த்தை குழுவினருடன் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கரும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை நள்ளிரவு வரை தாண்டி நீடித்தது.

அப்போது, அரசு டாக்டா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபா் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அரசு டாக்டா்கள் சங்கம் அறிவித்தது. இதன்மூலம், பணிக்கு வழக்கம் போல செல்ல இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கையில், ‘ஏற்கெனவே போராட்டம் நடத்தி வரும் அரசு டாக்டா்களும் பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

மற்றொரு சங்கத்தின் போராட்டம் நீடிக்கிறது: ஏற்கெனவே, மற்றொரு அரசு டாக்டா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் (தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு) கடந்த 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனா். அதில் 5 மருத்துவா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா். போராட்டத்தை ஒத்திவைப்பதாகவோ அல்லது கைவிடுவதாகவோ அவா்கள் இதுவரை அறிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com