புதிய மோட்டார் வாகனச் சட்டம்: தமிழகத்தில் சில நாள்களில் அமல்
By DIN | Published On : 02nd September 2019 04:00 AM | Last Updated : 02nd September 2019 04:00 AM | அ+அ அ- |

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து குற்றங்களைத் தடுக்க மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் புதிய சட்ட திருத்தம் திங்கள்கிழமை (செப்.1) நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இதன்படி, குற்றத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. சிக்னலில் நிற்காமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டியை ஓட்டி செல்வது, குடி போதையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றத்துக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் புதிய சட்டம் அமலாக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் தமிழக போக்குவரத்து துறையினருக்கு அளிக்கப்படாததால் இங்கு புதிய சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:
மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமல்படுத்தியது குறித்து போக்குவரத்து துறையினருக்கு எந்த சுற்றறிக்கையும், அறிவிப்பும் அளிக்கப் படவில்லை. எங்களது இ செலான் கருவியில் பழைய அபராதத் தொகையே இடம்பெற்றுள்ளது.
இதனை மாற்றியமைக்க உரிய அரசாணை இல்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். எனினும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்கள்.