அண்ணா சாலையில் இரு வழி போக்குவரத்து: இன்றும், நாளையும் சோதனை ஓட்டம்
By DIN | Published On : 11th September 2019 04:38 AM | Last Updated : 11th September 2019 04:38 AM | அ+அ அ- |

சென்னை அண்ணாசாலையில் புதன்,வியாழக்கிழமைகளில் (செப்.11,12) இரு வழி போக்குவரத்து நடைபெறும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்:
மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு அண்ணா சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சில இடங்களில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சில இடங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. இதற்காக அண்ணா சாலையில் இருந்து எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகிய சாலைகள் வழியாக அண்ணா சாலையை சென்றடைந்தன.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதேபோல நந்தனம்,தேனாம்பேட்டை பகுதியிலும் அண்ணா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக அந்தப் பகுதியை சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மெட்ரோ ரயில் பணி முழுமையடைந்து, அதன் சேவை அண்மையில் தொடங்கியது.
மெட்ரோ ரயில் பணிக்கு அண்ணா சாலையில் சுரங்கம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதில் நந்தனம் பகுதியில் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றதால், அங்கு அண்ணா சாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து ஜூலை மாத இறுதியில் தொடங்கியது.
மீண்டும் இருவழி: அண்ணா சாலையின் பிற பகுதியில் சாலை சீரமைக்கும் பணி முடிவடையாததால், அங்கு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது அங்கு சாலை சீரமைப்புப் பணி முடிவடைந்துவிட்டதால், அண்ணசாலையில் இருந்து ஜி.பி. சாலை வரையிலும், அண்ணாசாலையில் இருந்து ஒயிட்ஸ் சாலை வரையிலும் மீண்டும் இரு வழிப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
இதற்காக அந்த சாலைகளில் புதன்கிழமை, வியாழக்கிழமை (செப். 11, 12) ஆகிய இரு நாள்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள்: இது தொடர்பாக செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டுக்குச்செல்ல ஒயிட்ஸ் சாலையில் அனுமதிக்கப்படும்.
இதேபோல, அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை, அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.
அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஸ்பென்ஸர் சந்திப்பில் வலது புறம் செல்லலாம். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி. சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையைச் சென்றடையலாம்.
பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.
அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளின் வரவேற்பைப் பொறுத்தே, அண்ணா சாலை விரைவில் இரு வழிப்பாதையாக மாற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.