கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 17 நாள்களில் குடிநீர்
By DIN | Published On : 11th September 2019 04:32 AM | Last Updated : 11th September 2019 04:32 AM | அ+அ அ- |

கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து 17 நாள்களில் சென்னைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்புள்ளது என தெலுங்கு கங்கை கால்வாய் நீர் மேலாண்மைத் திட்ட கண்காணிப்புப் பொறியாளர் வெங்கடேஸ்வர ராவ் கூறினார்.
இதுகுறித்து திருப்பதியில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
தற்போது ஸ்ரீசைலம் அணையிலிருந்து சோமசீலா நீர்த் தேக்கத்துக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோமசீலா அணையில் தற்போதைய நிலவரப்படி, 31 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே இந்த அணையில் இருந்து நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணைக்கு 6,000 கன அடி தண்ணீர் வீதம் செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சோமசீலா நீர்த் தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கண்டலேறு நீர்த் தேக்கத்துக்கு வந்து சேர இன்னும் இரண்டு நாள்கள் ஆகும். கண்டலேறு அணையின் மொத்த கொள்ளவு 68 டி.எம்.சி. ஆனால் தற்போது 5 டிஎம்சி அளவுக்கு மட்டுமே அங்கு நீர் இருப்பு உள்ளது.
கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு 8 முதல் 10 டிஎம்சி ஆக அதிகரிக்கும்போது, அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். சோமசீலா நீர்த் தேக்கத்தில் இருந்து வந்து சேரும் தண்ணீர் மூலம் கண்டலேறு நீர்த் தேக்கத்தில் நீர் இருப்பு 8 முதல் 10 டிஎம்சி ஆக அதிகரிக்க இன்னும் 16 நாள்கள் ஆகும். எனவே இன்னும் 16 அல்லது 17 நாள்களில் கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் ஒரு மணி நேரத்துக்கு இரண்டு கி.மீ. வீதம் செல்லும். எனவே கண்டலேறு அணையில் திறக்கப்படும் தண்ணீர் சென்னை செல்வதற்கு 4 நாள்கள் வரை ஆகும் என்றார்.
கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் தற்போது சென்னையில் நிலவி வரக் கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது, 8 டிஎம்சி தண்ணீர் ஆந்திரத்தில் இருந்து திறந்து விடுவதற்கு ஆந்திர முதல்வர் சம்மதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.