தலைமை நீதிபதி இடமாற்றம் கண்டித்து வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
By DIN | Published On : 11th September 2019 04:33 AM | Last Updated : 11th September 2019 04:33 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயின் இடமாற்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்களின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் இடமாற்றை உத்தரவைத் திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்களின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (எம்ஹெச்ஏ), மெட்ராஸ் பார் அசோசியேசன் (எம்பிஏ), பெண் வழக்குரைஞர்கள் சங்கம், லா அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவு வாயில் முன் திரண்ட வழக்குரைஞர்கள் தலைமை நீதிபதியின் இடமாற்ற உத்தரவைத் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதே போன்று தலைமை நீதிபதி இடமாற்ற உத்தரவைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக விசாரணை இல்லை: தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பிவிட்டதால் தலைமை நீதிபதி தஹில ராமாணீ திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த அமர்வு முன் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டன.
இந்த நிலையில் தலைமை நீதிபதி இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனால் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் வழக்குகள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.
வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை: நீதிமன்ற புறக்கணிப்பின் காரணமாக, உயர்நீதிமன்றத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் வழக்குரைஞர்கள் பெரும்பாலும் ஆஜராகவில்லை. இதனால் பல வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
நீதிமன்ற புறக்கணிப்பின் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சொற்ப எண்ணிக்கையிலேயே வழக்குரைஞர்களும், பொதுமக்களும் காணப்பட்டனர்.