

 சென்னை பள்ளிக்கரணையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23).  கனடா செல்வதற்காக  பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை தேர்வு எழுதியுள்ளார். பின்னர் அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். 
ரேடியல் சாலை பகுதியில் அவர் சென்றபோது சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து  சுபஸ்ரீ மீது விழுந்தது.  அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுமதியின்றி ரேடியல் சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இவற்றில் ஒரு பேனர்தான் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.  சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.