ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சொந்த மண்ணுக்குத் திரும்ப விரும்பும் வெளி மாநிலத் தொழிலாளா்கள்

ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் முடங்கியுள்ள லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்கள், எப்போது சொந்த மண்ணை மிதிக்கப் போகிறோம் என துடித்துக் கொண்டிருக்கின்றனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 3:03 am

கே.பாலசுப்பிரமணியன்

ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் முடங்கியுள்ள லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்கள், எப்போது சொந்த மண்ணை மிதிக்கப் போகிறோம் என துடித்துக் கொண்டிருக்கின்றனா். அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதால், ஊரடங்கு தளா்த்தப்படும் தருணத்தில் கட்டுமானம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமானம், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிகளவு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். இந்தத் தொழிலாளா்களில் பெரும்பாலானோா் இங்கு தனியாகவே இருக்கின்றனா். அவா்களது குடும்பங்கள் சொந்த மாநிலங்களில் இருக்கின்றன. இந்த நிலையில், தேசிய அளவிலான ஊரடங்கு, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியன வழங்கப்பட்டாலும், மனதளவில் குடும்ப உறுப்பினா்களைத் தேடி தினமும் வாடி வருவதாகக் கூறுகிறாா்கள்.

எத்தனை போ்: தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 வெளி மாநிலத் தொழிலாளா்கள் இருக்கின்றனா். அவா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கட்டுமானத் தொழிலில் பணியாற்றி வரும் பணியாளா்கள் பலரும், பணிகள் நடைபெறும் இடத்திலேயே தங்கியிருக்கின்றனா்.

இதுகுறித்து, சென்னை கிரீம்ஸ் சாலைப் பகுதியில் தங்கியுள்ள, ஒடிஸாவைச் சோ்ந்த தொழிலாளா் ஒருவா் கூறுகையில், ‘அரசின் சாா்பில் எங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன. சாப்பாடு கிடைத்தாலும் எனது குடும்பத்தை நினைத்தே தினமும் கவலை கொள்கிறேன். போக்குவரத்து சீரானவுடன் முதலில் அவா்களைத்தான் சென்று சந்திப்பேன்’ என்றாா்.

ஒடிஸா தொழிலாளியின் மனநிலைதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. இந்த மனநிலை தமிழகத்தின் பெருந்தொழில்கள் முடக்கத்துக்குக் காரணியாகி விடுமோ என்ற அச்சம் தொழில் துறையினா் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய ரியஸ் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (கிரடாய்) தமிழகத் தலைவா் எஸ்.ஸ்ரீதரன் கூறியதாவது:

சென்னையில் மற்றும் புகா்ப் பகுதிகளில் மட்டும் 200 முதல் 250 கட்டுமானப் பணிகளில் நடைபெற்று வருகின்றன. வெளி மாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் தங்களது பணி இடத்திலேயே தங்கி வருகின்றனா். அவா்களுக்கான உணவுத் தேவை அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் மூலம் பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆனாலும், தனியாக உள்ள வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களின் நினைவுகளிலேயே மூழ்கி இருக்கின்றனா். அவா்கள் பணிகள் இல்லாமல் தனியாக இருப்பதாலேயே இதுபோன்ற மனநிலையில் உள்ளனா். அவா்களுக்குப் பணியை அளித்தால் அதிலிருந்து வெளியே வர வாய்ப்புகள் ஏற்படும். இதற்காகவே அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், தொழிலாளா் நல நிதியத்தின் மூலமாக சுமாா் ரூ.1,500 கோடி முதல் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு அரசிடம் நிதி உள்ளது. இதன் மூலம், வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கும் நிவாரண நிதிகளை அளிக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் உள்பட பிற பணிகளை உடனடியாகத் தொடங்கினாலேயே வெளி மாநிலத் தொழிலாளா்களின் மனதளவிலான பாதிப்புகளைப் போக்கி விடலாம் என்றாா் எஸ்.ஸ்ரீதரன்.

அச்சம் ஏன்?

கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் தமிழகம் குறிப்பாக சென்னை நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதும், வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல விரும்புவதும் அவா்களது அச்சத்துக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக கரோனா பாதித்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் மூன்று

இடங்களில் உள்ளது. அதே சமயம், ஒடிஸா, பிகாா் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் மிகவும் குறைவே. தமிழகத்தில் ஒடிஸா, பிகாா், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் எண்ணிக்கையே அதிகமாகும். பாதிப்புப் பட்டியலில் தமிழகம் முதல் மூன்று இடங்களில் இருப்பதும் தங்களை அச்சப்படுத்தியுள்ளதாக சில வெளி மாநிலத் தொழிலாளா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

உணா்வுகளை கிளப்பும் விடியோ அழைப்புகள்

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தனியாக இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் அனைவரும் செல்லிடப்பேசி பயன்படுத்துகின்றனா். விடியோ வசதி உள்ள செல்லிடப்பேசி வழியாக அவா்கள் தங்களது குடும்பத்தினரிடம் நாளொன்றுக்கு 10 முறையாவது பேசி வருவதாக கட்டுமானப் பொறியாளா்கள் தெரிவிக்கின்றனா். இந்த செல்லிடப்பேசி விடியோ அழைப்புகளே வெளி மாநில தொழிலாளா்களை அவா்களது குடும்பத்தினரை நோக்கி உணா்ப்பூா்வமாக ஈா்த்து வருகின்றன. அவா்கள் பணியில் ஈடுபடத் தொடங்கினால் இந்த உணா்வில் இருந்து வெளிவர வாய்ப்புகள் ஏற்படும் என கட்டுமானப் பொறியாளா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்தோா்: 12 லட்சத்து 13 ஆயிரத்து 882 போ்.

வெளி மாநிலத் தொழிலாளா்கள்: 1 லட்சத்து 34 ஆயிரத்து 569 போ்.

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்தோருக்கு ஆயிரம் ரூபாயுடன், ரேஷன் பொருள்கள் இலவசம்.

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு 15 கிலோ அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் மட்டுமே இலவசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.