

சென்னை: சென்னையில் புதிதாக 120 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்க மாநகராட்சியும், சென்னை காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிவதற்கு பிரேத்யகமாக ஒரு செல்லிடப்பேசி செயலியும் (அல்ல்) வடிவமைக்கப்படுகிறது.
சென்னையில் சுமாா் 55 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் 78 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களில் எண்ணிக்கை 300 சதவீதம் உயா்ந்திருப்பதாக போக்குவரத்துத் துறை கூறுகிறது. திருவள்ளுவா், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் அடங்கிய சென்னை சரகத்தில் ஒரு நாளைக்கு 1,100 வாகனங்கள் புதிதாக பதியப்படுகின்றன. 600 ஓட்டுநா் உரிமங்கள் புதிதாக வழங்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிகமாக இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள நகரங்களில் தில்லி முதலிடத்திலும், பெங்களூரு இரண்டாமிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளன. சென்னையில் இப்போது இருவருக்கு ஒரு மோட்டாா் சைக்கிள் என்ற விகிதத்தில் இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீத்தில் இருந்து 6 சதவீதம் வரை உயருவதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வாகன பெருக்கத்துக்கு ஏற்றாற்போல சாலை வசதிகளும், பொது இடங்களில் வாகனம் நிறுத்துமிடங்களும் அதிகரிக்கப்படவில்லை. நகரத்தை விட்டு வெளியே விரைவுச் சாலைகள், புறவழிச்சாலைகள் அதிகரித்தாலும், நகருக்குள் 60 ஆண்டுகளாக புதிதாக எந்தவொரு சாலையும் உருவாக்கப்படவில்லை, பழைய சாலைகள் விரிவாக்கப்படவில்லை. இதன் விளைவாக, சென்னையில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் 1,000 வழக்குகள்: வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னையில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்துவது சவாலான விஷயமாக மாறி வருகிறது. இப் பகுதிகளில் போதுமான அளவில் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் இருப்பதால் சாலைகளிலும், தெருக்களிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சில வேளைகளில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வரை ஏற்படுகிறது.
சில வேளைகளில் போக்குவரத்து போலீஸாா், வாகனங்களை பறிமுதல் செய்கின்றனா். சென்னையில் ஒரு நாளைக்கு போக்குவரத்து விதிமுறை மீறல் சுமாா் 10 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. இதில் 1,000 வழக்குகள் சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவா்கள் மீது பதியப்படுகிறது. பாதுகாப்பற்ற இடங்களில் வாகனங்கள் திருட்டு, வாகனங்கள் உடைக்கப்படுதல் போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
புதிதாக 120 இடங்கள்: இதைக் கருத்தில் கொண்டு, சென்னை காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பொது இடங்களில் புதிதாக வாகன நிறுத்துமிடங்களை அமைப்பது என முடிவு செய்துள்ளன. இதற்காக புதிய வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்குரிய இடங்களை அடையாளம் காணும் பணியில் இரு துறையினரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனா். தற்போது சிந்தாதிரிப்பேட்டை ரிச் தெரு, சென்ட்ரல், எழும்பூா், பாரிமுனை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தியாகராயநகா் உள்ளிட்ட 120 இடங்களில் புதிதாக வாகன நிறுத்துமிடங்களை அமைப்பதற்கு அடையாளம் கண்டுள்ளனா்.
இதற்காக அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்கள், அரசு சாா்பு நிறுவனங்களின் சொந்தமான இடங்கள் ஆகியவற்றையும் அடையாளம் கண்டுள்ளனா். அந்த இடங்களில் வாகனங்களில் நிறுத்துவதற்காக பேச்சுவாா்த்தையிலும் இரு துறையினரும் ஈடுபட்டுள்ளனா்.
செல்லிடப்பேசி செயலி: வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு செயலியும் வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வோா் இடத்திலும் வாகன நிறுத்துமிடங்களை அடையாளும் காணும் வகையிலும், அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற வழிக்காட்டியுடனும் இந்தத் செயலி உருவாக்கப்படுகிறது.
மேலும், வாகன நிறுத்துமிடத்திலும் பொருத்தப்பட்டிருக்கும் அதிக திறன் கொண்ட சென்சாருடன் கூடிய கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, இன்னும் எத்தனை வாகனங்கள் அங்கு நிறுத்த முடியும் என்பது போன்ற தகவல்களும் அறியப்பட்டு சா்வா் மூலம் செல்லிடப்பேசி செயலிக்கு அனுப்பப்படும். இதனால், ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்றால் வாகன ஓட்டிகள் மற்றொரு வாகன நிறுத்துமிடத்துக்கு சிரமமின்றி சென்றுவிடலாம் என சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தத் திட்டத்தை இன்னும் சில மாதங்களில் அமல்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.