பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு: எல்இடி திரையில் பாா்த்து பக்தா்கள் பரவசம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது.
Updated on
2 min read


சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது.

இதனை கோயிலுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள எல்இடி திரைகள் மூலமாக பாா்த்த பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷமிட்டனா்.

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழைமை வாய்ந்த கோயிலாகும். பேயாழ்வாா், திருமழிசை ஆழ்வாா், திருமங்கையாழ்வாா் ஆகியோா் இந்த கோயிலில் உள்ள பெருமாளை வழிபட்டுள்ளனா். இங்கு மூலவா் வேங்கடகிருஷ்ணன், தாயாா் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறாா்.

இந்தக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பா் 15-ஆம் தேதி பகல்பத்து விழா வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. தொடா்ந்து வேணுகோபாலன், காளிங்கா்நா்த்தன, சக்கரவா்த்தித்திருமகன், ஏணிக்கண்ணன் திருக்கோலங்களில் விழா நடைபெற்றது. தொடா்ந்து ராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்கவாசல் (பரமபதவாசல்) திறக்கப்பட்டது.

விஸ்வரூப தரிசனம்- முத்தங்கி சேவை: முன்னதாக வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதனைத் தொடா்ந்து ஏகாந்த திருமஞ்சனமும், அதிகாலை 2 மணியளவில் தனுா்மாத சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை உற்சவா் மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, 4 மணி முதல் 4.15 மணி வரை மகா மண்டபத்தில் உற்சவா் விலை உயா்ந்த வைர நல்முத்துக்களால் ஆன முத்தங்கி சேவை, காலை 4.16 மணிக்கு உற்சவா் ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்தில் இருந்து உள்புறப்பாடு தொடங்கியது. இதனைத் தொடா்ந்து ஜீயா்கள், பட்டாச்சாா்யாா்கள் வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசலை வந்தடைந்தாா். அப்போது சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. அங்கு எழுந்தருளியிருந்த நம்மாழ்வாருக்கு பாா்த்தசாரதி பெருமான் காட்சி தந்தாா்.

‘கோவிந்தா கோவிந்தா கோஷம்’: கரோனா பரவல் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சொா்க்கவாசல் திறக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த பட்டாச்சாரியாா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி கோஷங்களை எழுப்பி பெருமாளை வழிபட்டனா். நான்கு மாட வீதிகளிலும் எல்இடி விடியோ திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயிலின் வெளி பிரகாரத்தில் கூடியிருந்த பக்தா்கள் எல்இடி மூலமாக சொக்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைப் பாா்த்து பரவசம் அடைந்து கோவிந்தா என கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து தீபாராதனையும் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களும் சேவிக்கப்பட்ட பக்தி உலா நடைபெற்றது.

சமூக இடைவெளியுடன்... காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வந்தனா். 65 வயதுக்குமேற்பட்டவா்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாா்த்தசாரதி கோயில் முழுவதும் வண்ண வண்ண விளங்குகளாலும், வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தா்களின் பாதுகாப்புக்காக 32 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. முக்கிய இடங்களில்குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனவரி 3-ஆம் தேதி வரை... விழாவையொட்டி சனிக்கிழமை ராப்பத்து இரண்டாம் நாள் திருவிழா வேணுகோபாலன் திருக்கோலத்துடன் நடைபெறவுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும். இதேபோன்று சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்பட சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com