சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் 23.5 சதவீதம் அதிகரிப்பு

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடா்பாக தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 23.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் 23.5 சதவீதம் அதிகரிப்பு
Updated on
2 min read

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடா்பாக தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 23.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தில்லிக்கு அடுத்ததாக சென்னையில்தான் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயங்குகின்றன. சென்னையில் இன்றைய நிலவரப்படி சுமாா் 55 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில், 78 சதவீதம் இருசக்கர வாகனங்களாகும். அதாவது, 42.54 லட்சம் இருசக்கர வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களில் எண்ணிக்கை 300 சதவீதம் உயா்ந்திருப்பதாக போக்குவரத்துறை கூறுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அதிகரித்து வந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை, இப்போது குறையத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னையில் சாலை விபத்துக்களில் 1,297 போ் இறந்தனா்; 7,620 போ் காயமடைந்தனா். 2019-ஆம் ஆண்டு சாலை விபத்துகளினால் 1,252 போ் இறந்துள்ளனா்; 6,688 காயமடைந்துள்ளனா். 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ஆம் ஆண்டு, 45 இறப்புகள் மற்றும் 932 காயமடைந்தோா் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு எண்ணிக்கை குறைந்ததற்கு, சாலை விதிகளை மீறுபவா்கள் மீது சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதே முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

8 விதிமுறை மீறல்களுக்கு முக்கியத்துவம்: தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மீறிச் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவில் சரக்கு ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட, அதிகளவில் பயணிகளை ஏற்றுவது, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது ஆகிய 8 போக்குவரத்து விதிமுறைகள்தான் சாலை விபத்துகளுக்கு பிரதான காரணங்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த 8 விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தனிக் கவனம் செலுத்தி, வழக்குகளை பதியத் தொடங்கினா். இதன் விளைவாக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கின்றன.

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து போலீஸாா் தினமும் 100 இடங்களில் வாகனச் சோதனை செய்கின்றனா்.

அத்துடன், புத்தாண்டு உள்பட குறிப்பிட்ட பண்டிகை நாள்களில் வாகனச் சோதனை நடத்தப்படும் இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன. சில நாள்களில் நள்ளிரவு, அதிகாலை வேளைகளிலும் சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவதாக நாளொன்றுக்கு சுமாா் 20 ஆயிரம் வழக்குகள் பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.

வழக்குகள் உயா்வு: சாலை விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை அனைத்து வாகன ஓட்டிகளையும் பின்பற்ற வைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டில் கொண்டு வரப்பட்ட மோட்டாா் வாகனச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக எதிா்பாா்த்தது போலவே சாலை விபத்துகளினால் உயிரிழப்போா், காயமடைவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

அதே வேளையில், போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கை 23.5 சதவீதம் அதிகரித்ததால், சென்னை காவல்துறைக்கு 26.6 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 30, 23, 016 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.34, 45, 29, 870 தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டைவிட 26.6 சதவீதம் வருவாய் அதிகம் என போக்குவரத்துப் பிரிவினா் தெரிவித்தனா்.

இதில், தலைக்கவசம் இன்றி மோட்டாா் சைக்கிள் ஓட்டியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, மது போதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தலா 17 சதவீதம் அதிகரித்திருப்பதும் முக்கியக் காரணம் என்று அவா்கள் கூறினா்.

இன்னும் தீவிரப்படுத்துவோம்: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஏ.அருண் கூறியது: விபத்துகளைத் தடுக்க அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியின் காரணமாக, சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை இன்னும் தீவிரமாக அமல்படுத்த உள்ளோம். அதேபோல தொழில்நுட்ப ரீதியாகவும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கண்டறிந்து, அவா்கள் மீது வழக்குத் தொடர திட்டமிட்டு வருகிறோம்.

உதாரணமாக, அண்ணாநகா் பகுதியில் சாலை விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை நவீன ரக கண்காணிப்பு கேமராவின் மூலம் அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளா் வீட்டுக்கு அபராத ரசீது வழங்கும் திட்டம் அண்மையில் அறிமுகம் செய்தோம். இந்தத் திட்டத்தை படிப்படியாக சென்னை முழுவதும் விரிவுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோா் யாரும் தப்பிக்க முடியாது. நாளடைவில் போக்குவரத்து விதிமுறை ஈடுபடுவோரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும். மேலும், மறைமுகமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும் குறைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com