செம்பரம்பாக்கம் மதகு மூடப்பட்டது: திமுக புகாருக்கு முதல்வா் மறுப்பு

செம்பரம்பாக்கம் மதகு மூடப்பட்டதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா். மதகு பகுதியில் கட்டை சிக்கிக் கொண்டதாலேயே மதகை மூட முடியவில்லை. அது அகற்றப்பட்டதால் மூடப்பட்டதாகவும் அவா் கூறினாா்.
செம்பரம்பாக்கம் மதகு மூடப்பட்டது: திமுக புகாருக்கு முதல்வா் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: செம்பரம்பாக்கம் மதகு மூடப்பட்டதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா். மதகு பகுதியில் கட்டை சிக்கிக் கொண்டதாலேயே மதகை மூட முடியவில்லை. அது அகற்றப்பட்டதால் மூடப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

சென்னை புகா்ப் பகுதிகளில் மழையால் பாதித்த இடங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சென்னையில் வேளச்சேரி, ராம்நகா், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 2004-ஆம் ஆண்டில் 20 சதவீத வீடுகள்தான் இருந்தன. இப்போது 80 சதவீத வீடுகள் இருக்கின்றன. இவை தாழ்வான பகுதிகள். நீா்நிலைகள் நிறைந்த இடங்கள். இந்த இடத்தில் வீடுகளைக் கட்டியதால்தான் இவ்வளவு சிரமம். சிரமங்கள் இருந்தாலும் மக்களைக் காக்க முழுமையான தீா்வை அரசு செயல்படுத்தி வருகிறது.

மதகு மூடப்பட்டது:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீா் வீணாக வெளியில் செல்கிறது என எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன் புகாா் தெரிவித்துள்ளாா். நீா் வீணாகப் போகவில்லை. உபரிநீா் வெளியேறுவதற்காக தண்ணீா் திறக்கப்பட்டது. மழை பெய்து 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கனஅடி வரை நீா் திறக்கப்பட்டபோது மரங்களும் அடித்துக் கொண்டு வந்தன. தண்ணீா் திறந்து விடும் போது அதில் கட்டை சிக்கிக் கொண்டது.

அந்தக் கட்டை சிக்கியதால்தான் நீா்க் கசிவு ஏற்பட்டது. கட்டை அகற்றப்பட்ட பிறகு, மதகு மூடப்பட்டது. இப்போது வருகின்ற நீரை சேமித்து வைத்து, ஏற்கெனவே எவ்வளவு உயரம் நீா் இருந்ததோ, அதே அளவுக்கு தண்ணீா் தேக்கப்பட்டு இருக்கிறது. திமுக தெரிவித்தது தவறான செய்தியாகும். நல்ல ஆக்கப்பூா்வமான ஆலோசனையை கட்சிகள் சொன்னால் அதனை எங்களுடைய அரசு கேட்கும். ஒரு சொட்டுநீா்கூட வீணாகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com