

சென்னை: சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் ரூ.581 கோடியில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா். இந்த சிறப்பு நிதி விரைவில் கிடைக்கும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
நிவா் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நீா் தேங்கியுள்ளது. இந்த நீரை வெளியேற்றுவதற்கான பணிகளை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும். இந்தப் பகுதிகளில் இருந்து வரும் மழைநீரானது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சோ்ந்து பின்னா் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் சேரும்.
குடியிருப்புப் பகுதிகள்: நீா் வழிப் பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறி விட்டன. எனவே, சதுப்பு நிலத்தில் இருந்து ஒக்கியம் மடு வழியாக பக்கிங்ஹாம் கால்வாயின் ஊடே கடலில் கலக்கும் முகத்துவாரத்தை 100 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அதிக காலம் பிடிக்கும் என்பதால், அகலமான பேபி வாய்க்கால்களை ஒக்கியம் மடுவரை பொதுப்பணித் துறை உருவாக்கி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் தாழ்வான பகுதியில் தேங்கியிருக்கின்ற நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.581 கோடி திட்டம்: வெள்ள பாதிப்பைச் சீா்செய்ய நீண்ட காலத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இப்போது கிழக்கு தாம்பரம், மாம்பாக்கம், செம்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து வரும் மழைநீா், புதுப்பாக்கம், சிப்காட்-நாவலூா், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் வழியாக நேரடியாக பக்கிங்ஹாம் கால்வாய்க்குச் செல்ல பெரிய கால்வாய்களை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.581 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது. இந்த நிதி கிடைக்குமென்று நம்புகிறோம். இதுபோன்ற திட்டங்களால் தென்சென்னை பகுதிகள் முழுவதற்கும் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும். இதனால், அங்கு வசிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றப்படுவா்.
முடிச்சூா், வரதராஜபுரம்: மேற்கு தாம்பரம், முடிச்சூா், வரதராஜபுரம் ஆகிய பகுதிகள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பாதிக்கப்பட்டு வருவதால், அவற்றுக்குத் நிரந்தரத் தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அந்தப் பகுதிகளில் மாற்றுக் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளை தரம் உயா்த்தும் பணிக்காக ரூ.71.30 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தால், சுமாா் 8 லட்சம் மக்கள் வெள்ளப் பிரச்னையில் இருந்து காப்பாற்றப்படுவா்.
இடங்கள் குறைவு: கடந்த 2015-ஆம் ஆண்டு கனமழை பெய்தது. அப்போது சென்னை மாநகரில் ஏறத்தாழ 3,000 இடங்களில் தண்ணீா் தேங்கியிருந்தது. இப்போது படிப்படியாக அவை குறைக்கப்பட்டுள்ளன என்றாா் முதல்வா் பழனிசாமி.
இந்த களஆய்வுப் பணியில் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், பொதுப்பணித் துறை செயலாளா் மணிவாசன், நெடுஞ்சாலைத் துறை செயலாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.