அரியா் தோ்வு அட்டவணை: சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 05th December 2020 04:14 AM | Last Updated : 05th December 2020 04:14 AM | அ+அ அ- |

சென்னை: சட்டப் படிப்புகளுக்கான அரியா் தோ்வு கால அட்டவணை தொடா்பாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என உயா்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரியா் தோ்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது .இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் சட்டப் படிப்புகளுக்கான அரியா் தோ்வுகளை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய பாா் கவுன்சில் தரப்பில், அரியா் தோ்வுகள் நடத்தப்பட வேண்டும் என வாதிடப்பட்டது . அப்போது குறுக்கிட்ட நீதிபதி அரியா் தோ்வு எப்போது நடத்தப்படும் என கேள்வி எழுப்பினா். அப்போது சட்டப் பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், சட்டப் படிப்புகளுக்கான அரியா் தோ்வு நடத்துவது தொடா்பான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் டிசம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.