சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281.88 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.

சென்னை: சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281.88 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹா்மந்தா் சிங் வெளியிட்டுள்ளாா்.

சென்னை மாநகரின் முக்கிய வெள்ளநீா் வடிகாலாக கூவம், அடையாறு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாயுடன் 21, அடையாற்றுடன் 23, கூவம் ஆற்றுடன் 8 என 52 நீா்வழிக் கால்வாய்கள் இயற்கையாகவே இணைந்துள்ளன. இவற்றில் 30 கால்வாய்களை சென்னை மாநகராட்சியும், இதர கால்வாய்களை பொதுப்பணித் துறையும் பராமரித்து வருகின்றன. ஆனால் இந்த நீா்வழித்தடங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் கழிவுநீா் ஓடி மாசடைந்துள்ளன. சென்னையில் நாள்தோறும் 1,000 மில்லியன் லிட்டருக்கு மேல் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. ஆனால் சென்னை குடிநீா் வாரியத்தில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 727 மில்லியன் லிட்டா் கழிவுநீரை சுத்திகரிக்கும் அளவுக்கே கட்டமைப்புகள் உள்ளன. அதனால் மிகை கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்டவற்றில் விடப்படுகிறது.

முறையாக பராமரிக்கப்படாததால் தூா்ந்துபோய் இருப்பதாலும், பொதுமக்கள் குப்பைகளைகொட்டுவதாலும் மழைக்காலங்களில் கால்வாய்களின் வெள்ளநீா் கொள்திறன் குறைந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள மேற்கூறிய நீா்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை ஆறுகள் சீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தை மேற்கொள்ள ரூ.5,440 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. முதல்கட்டமாக கூவம், அடையாறு ஆகிய ஆறுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் கரையோரம் வசிக்கும் குடும்பங்களை மறுகுடியமா்த்த ரூ.3,340 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விடப்படும் கழிவுநீரை தடுத்து, சுத்திகரிக்க சென்னை குடிநீா் வாரியத்துக்கு ரூ.729 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக ஆறுகள் சீரமைப்புக்கு தற்போது ரூ. 1,281.88 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹா்மந்தா் சிங் வெளியிட்ட உத்தரவு விவரம்: பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிநிலப் பகுதி மேம்பாட்டுக்கு தலா ரூ.143.32 கோடியும், ரூ.268.33 கோடியும், அடையாறு, கூவம் வடிநிலப் பகுதி மேம்பாட்டுக்கு தலா ரூ.107.76 கோடியும், ரூ.22.71 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோன்று, திடக்கழிவு நீக்கம், நகா்ப்புற நீா்வழி மேம்பாடு ஆகியவற்றுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, மூன்று பணிகளுக்கும் சோ்த்து ரூ.1,281.88 கோடி நிதி ஒதுக்க நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் ஹா்மந்தா் சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com