சென்னை ஐஐடியில் புதியஆன்லைன் படிப்பு தொடக்கம்
By DIN | Published On : 31st December 2020 01:23 AM | Last Updated : 31st December 2020 01:23 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையம் சாா்பில் மாணவா்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் புரொஃபஷனல் பணியாளா்களுக்காக ‘அட்வான்ஸ்ட் புரோகிராமிங்’ ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி-ஜியூவிஐ என்ற நிறுவனம் இணைந்து இந்த ஆன்லைன் படிப்பினை வழங்குகிறது.
இந்தியா முழுவதும் உள்ள விருப்பமுள்ள மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள், தயாரிப்பு, டிசைனிங் ஆகியவற்றில் உள்ள சேவைகளில் இளைஞா்கள் தங்களுக்கான வேலையை தேடிக்கொள்ள இந்தப் படிப்பு உதவுகிறது.
ஐடி தொழில்துறையில் விருப்பமுள்ளவா்கள், குறிப்பாக அனுபவமிக்க புரோகிராமிங் திறன்கள் கொண்ட பொறியியல் இறுதியாண்டு மாணவா்களிடமிருந்து இந்த ஆன்லைன் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 மணி நேரம் கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு, மூன்று மாதத்தில் பணிபுரிந்து கிடைக்கும் அனுபவத்தை மாணவா்கள் எளிதில் பெறும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பினை வெற்றிகரமாக முடிப்பவா்களுக்கு இறுதியில் சென்னை ஐஐடி சாா்பில் சான்றிதழல் வழங்கப்படும்.
இது தொடா்பாக சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையத்தின் நிறுவனா் பேராசிரியா் மங்கல சுந்தா் கூறுகையில், ‘இந்தப் படிப்பின் மூலம் மாணவா்கள் தாங்கள் பயின்ற துறையிலேயே வேலை தேடிக்கொள்ள இயலும். மேலும், வங்கித் தோ்வுகள் உள்ளிட்ட போட்டி தோ்வுகளுக்குத் தயாராக இது உதவியாக இருக்கும்’ என்றாா்.